India News

`Rahul On Fire' - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரின் ட்வீட்டும்... பாஜக தலைவர்களின் விமர்சனங்களும்!

Thu, 02 May 2024

நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி 94 தொகுதிகளில் நடைபெறவிருக்கிறது. இதில், முதற்கட்ட வாக்குப்பதிவின்போது `ஊழலை ஒழிப்போம், இந்தியாவை வளர்ந்த நாடாக்குவோம் (விக்ஷித் பாரத்)' என பிரசாரம் செய்துவந்த பிரதமர் மோடி, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிலிருந்து, `காங்கிரஸ் உங்களின் சொத்துகளைப் பறித்து ஊடுருவல்காரர்களுக்குக் கொடுப்பார்கள். எஸ்.சி, எஸ்.டி, பிறப்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுப்பார்கள்' என இஸ்லாமியர்களை முன்வைத்து வாக்கு சேகரித்துவருகிறார்.

மோடி

இத்தகைய சூழலில், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்வீட் செய்ததைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர்கள் பலரும் காங்கிரஸை பாகிஸ்தானோடு இணைத்து விமர்சித்துவருகிறார்கள். முன்னதாக, பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சா ஃபவாத் ஹுசைன் (Ch Fawad Hussain) தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ராகுலின் பிரசார வீடியோ ஒன்றை ஷேர் செய்து `Rahul On Fire' என நேற்று மாலை ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க-வின் ஐ.டி செல் தலைவர் அமித் மால்வியா, `இம்ரான் கான் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றிய சா ஃபவாத் ஹுசைன், ராகுல் காந்தியை உயர்த்திப் பேசுகிறார். பாகிஸ்தானில் காங்கிரஸ் ஏதேனும் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருக்கிறதா... முஸ்லிம் லீக் முத்திரை கொண்ட தேர்தல் அறிக்கை முதல் அதற்கான ஒப்புதல் வரை, எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானுடனான காங்கிரஸின் தோழமை இதைவிட வெளிப்படையாக இருக்க முடியாது" என்று ட்வீட் செய்து விமர்சித்திருந்தார்.

மேலும், பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, ``பாகிஸ்தான் தலைவர் ஒருவர், பாரதத்துக்கு எதிராக நஞ்சை உமிழ்ந்து ராகுலை காந்தியையும், காங்கிரஸையும் உயர்த்திப் பேசியிருக்கிறார். முன்னதாக ஹபீஸ் சயீத் தனக்குப் பிடித்த கட்சி காங்கிரஸ் என்று தெரிவித்திருந்தார். அதேபோல், மணி சங்கர் அய்யர் பிரதமர் மோடியை பதவிநீக்கம் செய்ய ஆதரவு கேட்டு பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தார்.

ராகுல் காந்தி

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்களால் `பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷங்கள் எழுப்பப்பட்டது எங்களுக்கு நினைவிருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும் பாதுகாத்தனர். இன்று அவர்களுக்கிடையிலான உறவு, `காங்கிரஸ் கா ஹாத் பாகிஸ்தான் கே சாத்', `முஸ்லீம் லீக் தேர்தல் அறிக்கை முதல் பாகிஸ்தானை உருவாக்கிய முஸ்லிம் லீக் வரை' என என்னவென்று தெளிவாகிவிட்டது" என்று ட்வீட் செய்து சாடிருக்கிறார்.

Read more

`மீண்டும் மீண்டும் கூட்டணிக்கு அழைத்ததா பாஜக?’ - ரகசியம் உடைக்கும் அதிமுக Ex Minister ஜெயக்குமார்

Thu, 02 May 2024
Read more

ரிசல்டுக்கு பிறகு... ஸ்டாலின் கணக்கு... போலி கணக்கு... எடப்பாடி கொதிப்பு! | JV Breaks

Thu, 02 May 2024
Read more

Covishield : தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவா... உண்மை என்ன? | Imperfect Show

Thu, 02 May 2024
Read more

`அக்னியை சுற்றுதல் போன்ற சடங்குகளுடன் நடத்தப்படாவிட்டால், இந்து திருமணம் செல்லாது' - உச்ச நீதிமன்றம்

Thu, 02 May 2024

பதிவு திருமணம் செய்துகொண்ட விமானி தம்பதிகள் விவாகரத்து கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ``இந்து திருமணம் என்பது ஆடல், பாடல், விருந்து மட்டுமல்ல. அல்லது வரதட்சணை, பரிசுகளை அழுத்தத்தின் மூலம் கேட்டு பெறுவதற்கான சந்தர்ப்பமோ, வணிக பரிவர்த்தனையோ அல்ல. இந்திய சமூகத்தின் அடிப்படை பாரம்பர்யம்.

உச்ச நீதிமன்றம்

குடும்பத்திற்கான கணவன்-மனைவி என்ற அந்தஸ்தை, ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே உறவை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படும் ஒரு புனிதமான நிகழ்வு. இந்து திருமணம் என்பது ஒரு சடங்கு. புனித தன்மை கொண்ட நிகழ்வு என்பதை நாங்கள் கவனிக்கிறோம். திருமணத்தில் வாழ்க்கைத் துணைவர்கள் இருவரும் சமபாதி. திருமணம் இனப்பெருக்கத்தை எளிதாக்குகிறது. பல்வேறு சமூகங்களுக்குள் சகோதரத்துவ உணர்வை உறுதிப்படுத்துகிறது.

இந்து திருமணம் என்பது, ரிக் வேதத்தின் படி சப்தபதி (நெருப்புக்கு முன் மணமகனும், மணமகளும் சேர்ந்து ஏழு அடி எடுத்து வைப்பது) போன்ற சடங்குகளின்படி நடந்திருக்க வேண்டும். இது போன்ற சடங்குகள் இல்லாமல் நடத்தப்படும் திருமணம் இந்து திருமணமல்ல. இந்து திருமண சட்டத்தின் விதிகளின்படி சரியான திருமண விழா இல்லாமல், ஒருவரையொருவர் கணவன் - மனைவி என்ற அந்தஸ்தைப் பெற முற்படும் இளைஞர்களின் நடைமுறையை நாங்கள் நிராகரிக்கிறோம்.

இந்து முறைப்படி திருமணம்!

இந்து திருமண சட்டம் பலதார மணம் போன்ற அனைத்து வகையான உறவுகளையும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. பல்வேறு சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் கொண்ட ஒரே ஒரு திருமண முறை மட்டுமே இருக்க வேண்டும் என்பதே பாராளுமன்றத்தின் நோக்கம். இந்து திருமணச் சட்டத்தின் 7-வது பிரிவின்படி, அத்தகைய சடங்குகளைச் செய்யாத வரையில், இந்து திருமணம் நிறைவேறாது.

தேவையான சடங்குகள் செய்யப்படாத நிலையில், சான்றிதழ் பெற்றிருந்தாலும் அதை திருமணமாக உறுதிப்படுத்த முடியாது. 1954-ம் ஆண்டின் சிறப்பு திருமண சட்டப்படி, எந்த மத, சாதி, இனத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறலாம். ஆனால், 1955-ம் ஆண்டின் இந்து திருமண சட்டப்படி, அவர்கள் 5-வது பிரிவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதுடன், 7-வது பிரிவில் கூறப்பட்டுள்ள சடங்குகளையும் செய்திருக்க வேண்டும்.

தீர்ப்பு

இந்த வழக்கில் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் சடங்கு இல்லாததால், அதை திருமணமாகவே அங்கீகரிக்க முடியாது. இந்திய சமூகத்தில் கூறப்பட்ட திருமணம் எனும் அமைப்பு எவ்வளவு புனிதமானது என்பதை திருமணத்துக்கு முன்பு இளைஞர்களும் பெண்களும் ஆழமாக சிந்திக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Read more

சி.பி.எம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய முயன்ற 1 கோடி ரூபாய்?! - திருச்சூரில் நடந்தது என்ன?!

Thu, 02 May 2024

கேரள மாநிலம் திருச்சூரை மையமாகக்கொண்டு சி.பி.எம் கட்சி சார்பில் ரகசிய வங்கி கணக்குகள் செயல்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியதுடன், மாவட்ட கமிட்டி பெயரில் உள்ள வங்கிக்கணக்கு ஒன்றை வருமான வரித்துறை கடந்த மாதம் முடக்கியது. அந்த வங்கிக்கணக்கு வெளியே தெரியாமல் ரகசியமாக செயல்படுத்தப்பட்டு வந்ததாகவும், அந்த வங்கி கணக்கில் இப்போது 4.80 கோடி ரூபாய் உள்ளதாகவும் கூறப்பட்டது.

சி.பி.எம் திருச்சூர் மாவட்ட செயலாளர் எம்.எம்.வர்க்கீஸ்

இந்த நிலையில் முடக்கப்பட்ட வங்கிக்கணக்கில் சி.பி.எம் திருச்சூர் மாவட்டச் செயலாளர் எம்.எம்.வர்க்கீஸ் ஒரு கோடி ரூபாய் டெப்பாசிட் செய்யச் சென்றார். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் வருமான வரித்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வங்கிக்குச் சென்ற வருமான வரித்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்ததுடன், பணம் எங்கிருந்து வந்தது எனவும் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், சி.பி.எம் மாவட்டச் செயலாளர் எம்.எம்.வர்க்கீஸ் உள்ளிட்டவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதே சமயம் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதன் அடிப்படையிலேயே ஒரு கோடி ரூபாயை டெப்பாசிட் செய்ய சென்றதாக சி.பி.எம் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருச்சூர் மாவட்ட சி.பி.எம் செயலாளர் எம்.எம்.வர்கீஸ் கூறுகையில், "மத்திய பா.ஜ.க அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சி.பி.எம் கட்சியை வேட்டையாடி வருகிறது. அந்த வேட்டையாடலின் ஒரு பகுதியாக சி.பி.எம் கட்சியின் வங்கி கணக்கையும், திருச்சூர் மாவட்ட குழுவின் வங்கி கணக்கையும் வருமானவரித்துறை முடக்கி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கில் இருந்த ஒரு கோடி ரூபாயை எடுத்தோம். தேர்தல் சம்பந்தமாக சட்ட ரீதியான கட்சி செலவுகளுக்காக அந்த ஒரு கோடி ரூபாயை எடுத்திருந்தோம். அந்த பணம் எடுத்தது சம்பந்தமாக ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சி.பி.எம் மாவட்ட அலுவலக ஊழியர்களையும் விசாரணைக்காக வங்கியில் ஆஜராகும்படி கூறினர். விசாரணைக்காக வங்கியில் சென்றபோது வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் எடுத்தது தவறான நடவடிக்கை என வருமான வரித்துறை கூறினார்கள். அது மட்டுமல்ல வங்கி கணக்கை முடக்கி நடவடிக்கை எடுத்தார்கள். அவர்கள் அனுமதி இல்லாமல் பண பரிவர்த்தனை செய்ய கூடாது எனவும் வங்கியில் இருந்து எடுத்த ஒருகோடி ரூபாயை செலவு செய்யக் கூடாது என்றும் அவர்கள் கூறினார்கள்.

எம்.எம்.வர்க்கீஸ்

அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை செலவு செய்யாமல் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தோம். இந்த நிலையில்தான் வருமானவரித் துறையின் திருச்சூர் அசிஸ்டன்ட் டைரக்டர் கையெழுத்திட்டு எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த நோட்டீஸில் அவருடைய முகாம் அலுவலகமான பேங்க் ஆப் இந்தியா திருச்சூர் கிளையில் 30.4.2024 மதியம் மூன்று மணிக்குள் ஆஜராக வேண்டும் என்றும், ஏற்கனவே வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தை அப்போது எடுத்து வர வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் தான் நானும் மாவட்ட அலுவலக செயலாளரும் ஒரு கோடி ரூபாயுடன் வங்கியில் சென்றோம். இந்த நிலையில்தான் அந்த பணத்தை வேண்டும் என்றே வருமானவரித்துறை பறிமுதல் செய்துள்ளது. பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று நாங்களாக வங்கிக்கு போகவில்லை. இதுதான் உண்மையில் நடந்த சம்பவம். வருமானவரித்துறையினர் வேண்டும் என்றே இவ்வாறு செயல்படுகின்றனர். சி.பி.எம் பான் எண்ணை வங்கி ஊழியர்கள் தவறாக குறிப்பிட்டதுதான் வங்கி கணக்கு முடக்க காரணம்" என்றார். சி.பி.எம் கட்சியினர் நிர்வாகத்தில் உள்ள திருச்சூரி கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் பணம் மோசடி சம்பந்தமான விசாரணையின் தொடர்ச்சியாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read more

கழுகார்: கொதித்த மனைவி; சிக்கலில் `அகிம்சை' அமைச்சர் டு வாடகையுடன் IPL டிக்கெட்; அதிகாரிகளின் ஆட்டம்

Thu, 02 May 2024

தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டியது, உள்ளடி வேலை செய்தது என ஏற்கெனவே வடமாவட்டத்தைச் சேர்ந்த அகிம்சை அமைச்சர்மீது அறிவாலயத்தில் புகார்கள் வரிசைகட்டி நிற்க, தற்போது அவருடைய மனைவியின் போன் உரையாடல் ஆடியோ ஒன்றும் அறிவாலயத்தைக் கொதிக்கவைத்திருக்கிறதாம்.

சமீபத்தில் அகிம்சை அமைச்சரை ‘சமூக நிகழ்ச்சி’யில் கலந்துகொள்ளச் சொல்லி சிலர் போனில் தொடர்புகொண்டார்களாம். போனை எடுத்த அமைச்சரின் மனைவி, `பேசுபவர் தெரிந்தவர்தானே...’ என்ற நம்பிக்கையில் தன் மனக்குமுறலையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டார். “நாடாளுமன்றத் தேர்தலில் என் மகனுக்கு சீட் கேட்டிருந்தோம். ஆனால், ஏதேதோ காரணம் சொல்லி கட்சித் தலைமை நிராகரித்துவிட்டது. இது எல்லாத்துக்கும் காரணம், அந்த சீனியர் அமைச்சர்தான். தன் மகனுக்கு சீட் வாங்க, என் மகனைப் பலிகொடுத்துவிட்டார். அவருடைய மகன் தோற்க வேண்டும். அவரின் அமைச்சர் பதவியும் போக வேண்டும்” என அவர் அடுக்கிக்கொண்டே போயிருக்கிறார். இந்தப் பேச்சு முழுவதையும் பதிவுசெய்துகொண்ட சமூகத்து முக்கிய நிர்வாகி, அதை அப்படியே அந்த சீனியர் அமைச்சர் தரப்புக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டாராம்.

ஆடியோவைக் கேட்டுக் கொதித்துப்போன அந்த சீனியர் அமைச்சர், “தேர்தல் முடிவு வரட்டும்... யார் பதவி பறிபோகிறது எனப் பார்ப்போம்” எனக் கொந்தளித்துவிட்டாராம்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த நிலையில், சத்தியமூர்த்தி பவனும் மாற்றத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதாவது, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களின் தலைவர்களை மாற்றுவதற்காகத் தீவிரம் காட்டிவருகிறது மாநிலத் தலைமை. முதற்கட்டமாக சென்னையில் இரண்டு, காஞ்சிபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் தலா ஒன்று என ஆறு இடங்களுக்கு மாவட்டத் தலைவர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்கள்.

சத்தியமூர்த்தி பவன்!

இந்த நியமனத்தில் தன் பங்குக்கு இரண்டு, முன்னாள் மத்திய அமைச்சரான தன் குருநாதர் தரப்புக்கு இரண்டு, தன் சகாக்கள் பங்குக்கு இரண்டு எனப் பிரித்துக் கொடுத்து, அவர்களிடமிருந்து மட்டும் பரிந்துரைகளை வாங்கிவருகிறதாம் தலைமை. “பொறுப்புக்கு வந்ததிலிருந்து ஆட்டம் அதிகமாக இருக்கிறது. இந்தப் பூனைக்கு யார் முதலில் மணி கட்டுவது” எனக் கிசுகிசுக்கிறார்கள் எதிர்க்கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க அமைப்பாளருமான தாம்பரம் நாராயணன் திடீரென கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார். இந்தத் திடீர் ராஜினாமாவுக்கு என்ன காரணம் என விசாரித்தால், “அ.ம.மு.க-வில் இருந்தபோது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவை எதிர்த்து போட்டியிட்டு, கணிசமான வாக்குகளைப் பெற்றவர் நாராயணன். ஆனால், தி.மு.க-வில் கவுன்சிலர் சீட்கூட அவருக்குக் கொடுக்கவில்லை.

செந்தில் பாலாஜி

மாவட்டச் செயலாளரான அமைச்சர் தா.மோ.அன்பரசனோ, இந்தத் தேர்தலில் ஒரு பூத் கமிட்டி மெம்பராகக்கூட தாம்பரம் நாராயணனை நியமிக்கவில்லை. எம்.எல்.ஏ ராஜாவும், அமைச்சர் தா.மோ.அன்பரசனும் கட்சிப் பொறுப்புகளில் தங்களுக்கான ஆட்களை நியமித்துக்கொண்டு தனி ராஜாங்கமே நடத்துகிறார்கள். அண்ணனுக்கு மரியாதையே இல்லை. அதுமட்டுமல்ல, கட்சியில் சேர்ந்த புதிதிலேயே தாம்பரம் எம்.எல்.ஏ ராஜா-வின் ஆட்கள், நாராயணனைப் பொது இடத்தில் வைத்து அடித்துவிட்டார்கள். அது குறித்தப் புகாரிலும் நடவடிக்கை இல்லை. இப்படித் தொடர் அவமானங்களால்தான் அண்ணன் கட்சியிலிருந்தே விலகிவிட்டார்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளைக் காண வருபவர்கள், தங்கள் வாகனத்தை நிறுத்துவதற்கு வசதியாக, கலைவாணர் அரங்கத்தை வாடகைக்கு எடுத்திருக்கிறது தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம். இதற்கான வாடகை ஒப்பந்தத் தொகையோடு ஒவ்வொரு மேட்ச்சுக்கும் சில டிக்கெட்டுகளை, அதுவும் தாங்கள் கேட்கும் ஸ்டாண்டுகளில் கொடுக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கிறார்களாம் சில அதிகாரிகள்.

ஹனி மாவட்டத்தைச் சேர்ந்த மா.செ ஒருவரின் உறவினர், தொல்பொருள்கள் பராமரிப்புகளைக் கண்காணிக்கும் பிரிவின் மூத்த அதிகாரி ஆகியோரின் பெயர்கள்தான் இதில் பெரிய அளவில் அடிபடுகின்றன. அப்படிக் கிடைக்கும் டிக்கெட்டுகளை ‘பிளாக் மார்க்கெட்’டில் விற்பனை செய்தும் காசு பார்க்கிறார்களாம் அந்த அதிகாரிகள்!

கோடையைச் சமாளிக்க தண்ணீர், நீர்மோர் பந்தல்களை அமைக்கச் சொல்லி பல்வேறு கட்சித் தலைவர்களும், தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வமும் இதேபோல ‘அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு’வினருக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், பன்னீர் குழுவின் சார்பில் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மட்டும் தண்ணீர் பந்தலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

பன்னீர் செல்வம்

அதைத் திறந்துவைத்த பன்னீர்செல்வத்தின் முகத்தில் உற்சாகம் மிஸ்ஸிங். ‘பன்னீர் ஏன் டல்லாக இருக்கிறார்?’ என விசாரித்தால், “கோடைகாலத் தண்ணீர் பந்தலை, அனைத்துப் பகுதிகளிலும் திறக்கச் சொல்லி ஐயா உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதைச் செய்வதற்குத்தான் ஆள் இல்லை. ஜூன் 4-ம் தேதி ரிசல்ட் வெளியான பிறகாவது தனக்கு ஆதரவு பெருகுமா என்ற மனக்குழப்பத்தில் இருக்கிறார் ஐயா...” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read more

'பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு மோடி உறுதுணையாக உள்ளார்!" - குற்றம்சாட்டும் ஜோதிமணி

Thu, 02 May 2024

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி அமைதியாக நடைபெற்று முடிந்து, கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில், மூன்று அடுக்கு துணை ராணுவப்படை மற்றும் போலீஸ் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பாளர்களின் தேர்தல் முகவர்கள் 24 மணி நேரமும் பார்வையிடுவதற்கு வசதியாக சி.சி.டி.வி கண்காணிப்பு அறையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில், கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஜோதிமணி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்துள்ளமைக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இந்தியா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். குறிப்பாக, வட மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதை பார்க்க முடிகிறது. பிரதமர் மோடி மாண்பை குறைக்கும் வகையில் குறிப்பிட்ட இஸ்லாமிய சமூக மக்களை குறிவைத்து தேர்தலை நடத்துவது அபாயகரமாக உள்ளது. பத்தாண்டு காலம் சாதனையை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். ஆனால், பிரதமர் அதற்கு எதிராக வெறுப்பு பிரசாரம் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வெறுப்பு பிரசாரங்கள் மீது பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது.

ஜோதிமணி

இளைஞர்கள், பெண்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் தங்கள் பைகளில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வைத்துள்ளனர். அறிக்கையினை செய்தியாளர் மத்தியில் காட்டுகின்றனர். தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான நீதி, இளைஞர்கள் நீதி, மாணவர்களுக்கான நீதி ஒவ்வொன்றும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சிகரமான சம்பவமாக உள்ளது. அப்படிப்பட்ட வேட்பாளர் குறித்து முன்னரே பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தலைமைக்கு எழுதியுள்ளார். பாரதிய ஜனதா கூட்டணியில் சீட் கொடுத்தது மட்டும் இல்லாமல். பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பா.ஜ.க மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக உள்ளனர். 150 - க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் தொடர்பாக நாடு நடுநடுங்கி கிடங்கிறது. ஆனால், பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் உள்ளார். பா.ஜ.க எம்.பி-க்கள் மீது பல பாலியல் வழக்குகள் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. அப்போதும், பா.ஜ.க அவர்களுக்கு ஆதரவாக இருந்தது தற்போது எழுந்துள்ள பிரச்னையிலும் பா.ஜ.க பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவருக்கு ஆதரவாக உள்ளது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read more

``எந்த வேட்பாளர் எப்போ வாபஸ் பெறுவார் என்றே தெரியவில்லை..!" - மோடியை எதிர்த்து களமிறங்கும் காமெடியன்

Thu, 02 May 2024

பிரதமர் நரேந்திர மோடி போன்று மிமிக்ரி செய்து பிரபலமானவர் நகைச்சுவையாளர் ஷ்யாம் ரங்கீலா (29). ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் 2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் பிரதமரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``நான் ஷ்யாம் ரங்கீலா. காமெடியன், உங்களுடன் எனது ‘மன் கி பாத்’ செய்யவே இந்த வீடியோ. உங்கள் அனைவரின் மனதிலும் வாரணாசியில் ஷ்யாம் ரங்கீலா தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற செய்தி உண்மையா? இது நகைச்சுவையா? என்ற கேள்வி இருக்கலாம்...

ஷ்யாம் ரங்கீலா

நான் அதற்கு உங்களுக்குப் பதில் சொல்கிறேன். இது நகைச்சுவை அல்ல... நான் வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடுகிறேன்... இந்த ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம், நான் ஒரு காரணத்திற்காக இதைச் செய்கிறேன். ஒருவருக்குப் பதிலளிக்க வேண்டுமானால், அவர்கள் சொந்த மொழியில்தான் பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அது புரியும். பிரதமருக்கு அவரது மொழியில் பதில் அளிக்க வாரணாசி வருகிறேன்.

சமீபத்தில் சூரத், இந்தூர் தொகுதிகளில் போட்டியின்றி வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். அவர்களுக்கு எதிராக வாக்களிக்க வேறு எந்த வேட்பாளரும் இல்லை. ஒருவர் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க விரும்பினாலும், அவர் அந்த உரிமையை நிலைநாட்ட இ.வி.எம்-ல் ஒருவரின் பெயர் இருக்க வேண்டும். ஆனால், வாரணாசியில் ஒரே ஒரு வேட்பாளருக்கு மட்டுமே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டு விடும் என நான் பயப்படுகிறேன்.

ஷ்யாம் ரங்கீலா

அதனால் நான் அங்கிருந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்... எனது குரல் அங்கு வரும் என்று நம்புகிறேன். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவித்தவுடன் வாரணாசி மக்கள் என் மீது மிகுந்த அன்பைக் கொடுத்துள்ளனர். எனக்குக் கிடைத்த பதிலால் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் விரைவில் வாரணாசிக்கு வருகிறேன்...மோடிக்கு அவரது மொழியில் பதில் சொல்வோம். தேர்தலில் போட்டியிடுவதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் இதுவே எனது முதல் தேர்தல். எனவே, எனக்கு உங்கள் ஆதரவு தேவை. என்னிடம் தேர்தல் பத்திரங்கள் இல்லை, யாரிடமும் நான் வாங்கவுமில்லை. எனவே, என்னை ஆதரியுங்கள்" எனக் கேட்டுக் கொண்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read more

இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் கட்சிகளின் ‘நீயா நானா’ யுத்தம்... வயநாடு வாக்குப்பதிவும் கள நிலவரமும்

Thu, 02 May 2024

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களின் 88 தொகுதிகளில் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. அண்டை மாநிலமான கேரளாவின் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் கட்சியின் ‘நீயா நானா...’ மல்லுக்கட்டுதான் கேரள அரசியலின் ஹாட் டாப்பிக்.

வயநாடு தொகுதி

‘மத்தியில் இணக்கம்; மாநிலத்தில் பிணக்கம்’ என்கிற ரீதியில், இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடது ஜனநாயக முன்னணியும், கூட்டணியின் அச்சாணியாக விளங்கும் அகில இந்திய காங்கிரஸும் கேரளாவில் நேருக்கு நேராக கோதாவில் குதித்தன. குறிப்பாக, வயநாடு தொகுதியில் களமிறங்கிய ராகுலுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் தேசிய தலைவர் டி. ராஜாவின் மனைவியும், இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜாவுக்கும் இடையே நடந்த வார்த்தைப் போர் அரசியல் விமர்சகர்களையே முகம் சுழிக்க வைத்தது. இவர்களின் காரசார யுத்தத்துக்கு இடையே பா.ஜ.க-வின் கேரள மாநில தலைவர் சுரேந்திரனும் களத்தில் இறங்கியதால் வயநாடு தொகுதியே தேசிய அளவில் உற்று நோக்கப்படும் முக்கிய தொகுதியாக மாறியது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமேதியில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவிய ராகுலை, 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெறச் செய்தார்கள் வயநாடு மக்கள். இந்த முறை அதைவிட கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வயநாட்டில் வெல்வார் ராகுல் எனச் சவால் விடுகிறது கேரள காங்கிரஸ். ஆனால், களநிலவரம் அதிகமான சவால்களையே ராகுலுக்கு அளித்திருக்கிறது என்கிறார்கள்.

வயநாடு தொகுதி

இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், “வயநாடு எம்.பி-யாக தொகுதிக்குள் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த வளர்ச்சிப் பணிகளையும் ராகுல் மேற்கொள்ளவில்லை, மக்களால் அவரை எளிதில் அணுக முடியவில்லை. கட்சி அடிப்படையிலும் வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பா.ஜ.க-வில் இணைந்தது; ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுடன் கேரளாவில் மோதுவது என ராகுலுக்கு பாதகமான அம்சங்கள் அதிகம். தவிர கேரளா முழுவதும் காங்கிரஸா கம்யூனிஸ்டா என இருமுனை போட்டி நிலவும் சூழலில், ராகுல் மீதான விமர்சனங்களைப் பூதாகரமாக்கியது பா.ஜ.க. இதன்மூலம் தங்களுக்கான வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கும் வேலையும் பா.ஜ.க முன்னெடுத்திருக்கிறது. வயநாடு காங்கிரஸ் பலமாக உள்ள தொகுதி என்பது மட்டுமே ராகுலுக்கு பெரிய ப்ளஸ்” என்கிறார்கள்.

வயநாடு மாவட்ட பா.ஜ.க தலைவர் பிரசாத் நம்மிடம் பேசுகையில், “ ‘மத்தியில் கூட்டு மாநிலத்தில் வேட்டு’ என்ற இரட்டை வேடத்தில் இந்த இரண்டு கட்சியினரும் மக்கள் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டில் யார் வென்றாலும் அது ஒன்றுதான் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இந்த ஏமாற்று வேலைக்கான சரியான பதிலடியை மக்கள் கொடுப்பார்கள்” என்றார்.

வயநாடு தொகுதி

வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன், “வயநாடு எப்போதுமே காங்கிரஸ் கட்சியின் கோட்டை. இடது ஜனநாயக முன்னணிக்கோ, பா.ஜ.க-வுக்கோ இங்கு வேலையே இல்லை. இடது ஜனநாயக முன்னணியும், பா.ஜ.க வும் தான் ஓரணியில் நிற்கிறார்கள். இந்தியா கூட்டணியில் இருந்தாலும் கேரளாவைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட்கள் எப்போதும் எங்களின் நேரடி எதிரி தான்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் தேசிய செயலாளர் டி. ராஜா நம்மிடம் பேசுகையில், “நேரடியாக பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டிய காங்கிரஸும் ராகுல் காந்தியும் கேரளாவில் குறுகிய மனப்பான்மையைக் கொண்டு கம்யூனிஸ்டுகளை எதிர்க்கிறார்கள். வயநாட்டில் எங்களை எதிர்த்து போட்டியிட்ட தவறுக்காக நிச்சயம் அவர்கள் வருத்தப்படப்போகிறார்கள்” என்றார்.

டி. ராஜா

“இருவரில் யார் செய்வது சரி, தவறு என்று சொல்லமுடியவில்லை. மோடியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் கேரளாவில் இந்த இரண்டு தரப்பினரும் செய்தது வித்தியாசமான அரசியல்.” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இந்த நிலையில் கேரளாவின் மூத்த பத்திரிகையாளர்கள் பேசும்போது, “கம்யூனிஸிட், காங்கிரஸ் பிரிந்து நிறு அரசியல் செய்தாலும், பினராய் விஜயன் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியின் மீதான அதிருப்தியும், பா.ஜ.க-வின் வெறுப்பு பிரசாரங்களும் இந்த முறை கேரளாவில் காங்கிரஸுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்ற கோணத்திலும் இதனை அணுக வேண்டி உள்ளது.

வயநாடு தொகுதி

திருச்சூர், திருவனந்தபுரம் போன்ற ஒன்றிரண்டு தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ.க-வினர் டஃப் கொடுப்பார்கள். வயநாடு தொகுதி ரிசல்ட்டின் தாக்கம் கேரளா முழுக்க எதிரொலிக்கும்” என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read more

``வேறு வழியில்லாமல் ஆள் சேர்த்திருக்கிறார்கள் பாஜக-வினர்..!” - சொல்கிறார் கே.எஸ் அழகிரி

Thu, 02 May 2024

``நாடாளுமன்ற தேர்தல் என்றாலும்கூட தி.மு.க-வுக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்தார் எடப்பாடி... அதெல்லாம் உறுதியாக தாக்கம் ஏற்படுத்துமே..!”

எடப்பாடி பழனிசாமி

``எடப்பாடி பரப்புரை மட்டுமே செய்தார். அ.தி.மு.க என்ற வலிமையாக கட்சி தேர்தலுக்காக திட்டமிட்டு வேலை செய்ததாக நான் கருதவில்லை. கட்சிக்காரர்கள் வீட்டில் சும்மா உட்கார முடியாதென எதோ பட்டும்படாமலும் வேலை செய்தார்கள். அ.தி.மு.க காட்டிய இந்த சுணக்கம், பா.ஜ.க-வுக்கு சாதகமாகும் என சிலர் தப்புக் கணக்கு போடுகிறார்கள் அது தவறு. அ.தி.மு.க-வின் இப்படியான செயல்பாடுகள் தி.மு.க கூட்டணியின் வாக்கு சதவீதத்தையும் அதிகரிக்கும். இன்னும் பா.ஜ.க-வுக்கு தமிழ்நாட்டில் டேக்-ஆஃப் இல்லை.அந்த கட்சி வளரவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும்..”

`தி.மு.க-வுக்கு ஆதரவான அலை என எதுவுமில்லை, 2019-ல் கிடைத்த வெற்றியை தி.மு.க கூட்டணி பெறாது என்கிறார்களே!”

செந்தில்பாலாஜி, ஸ்டாலின்

`பொதுவாக ஆட்சியில் கட்சி மீது அதிருப்திகள் இருக்கத்தான் செய்யும், ஆனால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொறுத்தவரை சுட்டிக்காட்டப்படும் தவறுகளை நியாயப்படுத்தாமல் உடனடியாக சரிசெய்கிறார். மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் மக்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர். கூடுதலாக, தி.மு.க தலைமையிலான `இந்தியா’ கூட்டணி மட்டுமே தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியாக அமைந்தது.  ஆனால் நேருக்கு மாறாக எதிர்க்கட்சிகள் ஆட்சிமீது அதிருப்தி ஏற்பட்டதாக பரப்புரை செய்தார்கள். அதெல்லாம் எடுபடவே இல்லை, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளும் `இந்தியா` கூட்டணிக்கென ரிசர்வ் செய்யப் பட்டுவிட்டது”

`திராவிடக் கட்சிகளின் துணையின்றி தேசிய கட்சியான பா.ஜ.க தமிழ்நாட்டில்  தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்ததே அவர்களுக்கான வளர்ச்சிதானே!”

அண்ணாமலை

``இதுவொன்றும்  கம்ப சூத்திரமோ, குதிரை கொம்போ கிடையாது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதைதான். நாங்கள் வளர்ந்துவிட்டோம், யாரின் தயவும் தேவையில்லை என முடிவெடுத்து பா.ஜ.க ஒரு கூட்டணியை அமைக்கவில்லை. வேறு வழியில்லாமல் ஆள் சேர்த்திருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரை, ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் ஒன்றாக தேர்தலை அணுக வேண்டும் என்பதுதான் சிறந்த அரசியல் நடைமுறை. சர்வாதிகார பா.ஜ.க-வை வீழ்த்த நாங்கள் அணிதிரண்டிக்கும் நேரத்தில் அதனை ஒரு பலவீனமாகவும் எதிர்மறையாகவும் பார்ப்பது தவறு”

ராகுல் காந்தி

`சரி, கேரளா மாநில தேர்தல் முடிவுகள் எப்படி அமையும்... சி.பி.எம் எதிர்ப்புக்கு மத்தியில் ராகுல் வெல்வாரா?”

``2019-ல் 20 தொகுதிகளில் 19 தொகுதிகளில் வென்றோம். அதைவிட கூடுதல் வெற்றியை காங்கிரஸ் பெறும். வயநாட்டில் ராகுல் காந்திக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது”

Read more

`கொடநாடு... கருணாநிதி விமர்சித்தார்; கொடைக்கானல்... விமர்சிக்க விரும்பவில்ல’ - செல்லூர் ராஜூ

Thu, 02 May 2024

மதுரையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நீர், மோர் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, "அரசு பேருந்துகளில் உதிரி பாகங்களை ஒட்டுநர், நடத்துநர் தங்கள் சொந்த செலவில் மாற்றிக்கொள்ள வேண்டுமென போக்குவரத்து கழக நிர்வாகம் நிர்பந்தம் செய்கிறது.

செல்லூர் ராஜூ

கடினமான பணிகளை அதிமுக தொழிற்சங்கத்தினருக்கும், எளிமையான பணிகளை திமுக மற்றும் கூட்டணி கட்சி தொழிற்சங்கத்தினருக்கும் போக்குவரத்துக் கழக நிர்வாகம் வழங்கி வருவது கண்டிக்கத்தக்கது.

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆளும் திமுக அரசு மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதில்லை, மழை வெள்ள பேரிடர் காலத்திலும், கடுமையான வெயில் நிலவும் காலத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

செல்லூர் ராஜூ

திமுக அரசு, மக்கள் பலம் தேவையில்லை, கூட்டணி கட்சிகளின் பலம் போதும் என நினைக்கிறது. முதலமைச்சர் குடும்பத்துடன் கொடைக்கானலில் கூலாக இருந்து விட்டு வரட்டும், அது குறித்து விமர்சனம் செய்ய மாட்டோம்.

ஜெயலலிதா கொடநாடுக்கு பயணம் சென்றது குறித்து அப்போது கலைஞர் விமர்சனம் செய்தார். ஆனால், அதுபோல் இப்போது முதலமைச்சரின் கொடைக்கானல் பயணம் குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

செல்லூர் ராஜூ

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது, மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. போதைப் பொருள் நடமாட்ட விவகாரத்தில் உளவுத்துறை, நுண்ணறிவுத்துறை செயலிழந்து விட்டது.

போதை பொருள் நடமாட்ட விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய அளவில் போதைப்பொருள் பயன்பாட்டு தளமாக குஜராத்தும், தமிழ்நாடும் விளங்குகிறது, போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read more

கார்ட்டூன்: பூச்சாண்டி..!

Wed, 01 May 2024
கார்ட்டூன்
Read more

`திரிணாமுல் காங்கிரஸுக்கு வாக்களிப்பதைவிட பாஜக-வுக்கு வாக்களிப்பதே மேல்' - ஆதிர் ரஞ்சன் சௌத்ரி!

Wed, 01 May 2024

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெற்றி பெறுவது அவசியம். அவ்வாறு செய்யாவிட்டால் மதச்சார்பின்மை கேள்விக்குறியாகிவிடும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பது, எனவே நேரடியாக பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதே நல்லது. எனவே, பா.ஜ.க-வுக்கும் வாக்களிக்காதீர்கள், திரிணாமுல் கட்சிக்கும் வாக்களிக்காதீர்கள். காங்கிரஸுக்கே வாக்கு செலுத்துங்கள்" எனப் பேசியதாக ஒரு வீடியோ வைரலானது.

காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் - மம்தா பானர்ஜி

இந்த வீடியோ குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், ``நான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை. ஒருவேளை அவர் அப்படி கூறியிருந்தால், எந்த சூழலில் அவர் இதைச் சொன்னார் என்றும் தெரியவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு நோக்கம் மட்டுமே உள்ளது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அது 2019-ல் பா.ஜ.க பெற்ற இடங்களை பாதிக்கும் குறைவாக குறைக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read more

`` `போய் தூக்கில் தொங்கு' எனக் கூறுவது தற்கொலைக்கு தூண்டியதாகாது..!" - கர்நாடக உயர் நீதிமன்றம்!

Wed, 01 May 2024

கர்நாடக மாநிலம், உடுப்பியில் பள்ளி முதல்வராகப் பணியாற்றி வந்த பாதிரியார் ஒருவர், 2019-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் பாதிரியாரை தற்கொலைக்குத் தூண்டியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நடந்த விசாரணையில், இளம் வயது பாதிரியாரான தற்கொலை செய்துகொண்டவர், திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் இருந்திருக்கிறார். இதை தெரிந்துகொண்ட அந்தப் பெண்ணின் கணவர், பாதிரியாரிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அப்போதுதான், பாதிரியாரிடம் 'போய் தூக்கில் தொங்கு' எனத் திட்டியிருக்கிறார். அதன் பிறகே அந்த பாதிரியார் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.

தற்கொலை

இந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா, ``குற்றம்சாட்டப்பட்டவர் வேண்டுமென்றே தற்கொலைக்குத் தூண்டும் எண்ணத்தில் அதைக் கூறவில்லை எனத் தெரியவருகிறது. தன் கோபத்தின் எல்லையில், உச்சபட்ச கோபத்தில் அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியிருக்கிறார். எனவே, `போய் தூக்கில் தொங்கு' எனக் கூறியதை, தற்கொலைக்குத் தூண்டியதாக கருத முடியாது" எனத் தீர்ப்பளித்திருக்கிறார்.

Read more